/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களில் களைகட்டிய பொங்கல் விழா
/
கிராமங்களில் களைகட்டிய பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 10:15 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில், உள்ள கிராமங்களில், பொங்கல் விழா களைகட்டின.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூரில் உள்ள குறிஞ்சி நகரில், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணி சார்பில், ஐந்தாம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. விழாவை ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி துவக்கி வைத்தார். விழாவில் சமத்துவ பொங்கல், குழந்தைகளுக்கான மாறுவேட போட்டிகள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று காலை (16ம் தேதி) கோலப்போட்டியும், குழந்தைகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு பெண்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கும்மி பாட்டு நடனம் நடைபெற உள்ளது. புதன்கிழமை காலை ஆண்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. மதியம் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட உள்ளது. மாலையில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையத்தில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது காலையில் பொங்கல் வைத்து சாமியை வழிபட்ட பின்பு குழந்தைகள் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறுமுகை அருகே ஆலாங்கொம்பில் ஓம் நாகலிங்கேஸ்வரர் கோவில் அருகே, தமிழ் நண்பர்கள் நற்பணி சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, 15ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடினர். மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், விளையாட்டுப் போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பரிசுகள் வழங்க உள்ளனர்.
காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களில், பொங்கல் விழாக்கள் நடைபெற்றன. ஊராட்சி தலைவர் ஞானசேகரன் விழாவை துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியருக்கு பரிசுகளை வழங்கினார்.