/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் விழா; மக்கள் ஒன்று கூடி கொண்டாட்டம்
/
பொங்கல் விழா; மக்கள் ஒன்று கூடி கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 10:05 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், பொதுஇடங்களில் பொங்கல் விழாவை மக்கள் சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சி பகுதியில், பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. வீடுகளில், பொங்கல் வைத்தும், வழிபாடு செய்து, இனிப்பு பொங்கலை நண்பர்களுக்கு வழங்கினர். மேலும், வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.
பொள்ளாச்சி நகராட்சி குமரன் நகர் தொடக்கப்பள்ளி வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள், பம்பரம் விளையாடி மகிழ்ந்தனர்.
* மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரியில், மூன்று நாட்களாக பொங்கல் பெருவிழா நடந்தது. முதல் நாளான கிராமப்புற சமையல் மற்றும் விளையாட்டு போட்டியான கபடி போட்டி நடந்தது. இரண்டாம் நாளான ஏறுதழுவுதல், முறுக்கு கடித்தல், அம்மி அரைத்தல், உலக்கை குத்துதல், கரும்பு கடித்தல், பூமாலை கோர்த்தல், ரங்கோலி வண்ணக்கோலங்கள் இடுதல் மற்றும் களிமண் சிற்பம் செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை இயற்கை வேளாண் இயக்குனரகம் இயக்குனர் பாலசுப்ரமணியம், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி இணை பேராசிரியர் சேதுபதி ஆகியோர் பேசினர். வரலாற்று சிறப்பு மிக்க நாடகங்களிலும், பாரம்பரிய நடனங்களிலும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மூன்றாம் நாளில் பொங்கல் வைத்தல், தேங்காய் சுடுதல், கயிறு இழுத்தல், உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. வாணவராயர் வேளாண்மை கல்லுாரி தாளாளர் கற்பகவள்ளி, கல்லுாரி இயக்குனர் கெம்பு செட்டி, கல்லுாரி முதல்வர் பிரபாகர் முன்னிலை வகித்தார். கல்லுாரி மாணவ மன்ற ஆலோசகர் ரவிக்குமார், மாணவர் மன்ற தலைவர் அகிலேஷ் மற்றும் இம்மன்ற மாணவர்கள் பங்கேற்று விழாவை நடத்தினர்.
* பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில், பொங்கல் விழா, மரப்பேட்டை ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது. முதியோர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட், தேவாலயங்கள், கடைவீதி சுப்ரமணிய சுவாமி கோவில், காந்தி வார சந்தை பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோருக்கு உணவும், பொங்கலும் வழங்கப்பட்டது. பேரவை தலைவர் நடராஜ், கவிஞர் முருகானந்தம், கவுன்சிலர் சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி மேற்கு போலீஸ், போக்குவரத்து போலீசார் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அதில், எஸ்.ஐ., மைக்கேல் சகாயராஜ் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
பொங்கல் பண்டிகையை யொட்டி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசார் அனைவரும், சுவாமி தரிசனம் செய்து ஸ்டேஷன் முன் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் தங்கள் அன்பை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
*கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் முன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, செயல் அலுவலர் ஈஸ்வரி, கவுன்சிலர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பொங்கல் வைத்து அனைவரும் வழிபட்டனர். இறுதியாக அனைவருக்கும் பொங்கல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
உடுமலை
உடுமலை, வாசவி நகர் குடியிருப்போர் நல அமைப்பு சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வாசவி நகர் மகளிர் நல அமைப்பினர் சார்பில், பொங்கல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, குழந்தைகள், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அமைப்பின் தலைவர் ஜெயசிங், செயலாளர் பஞ்சலிங்கம், பொருளாளர் பாலகுமார், கவுரவ தலைவர் அருட்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* குட்டை திடல் மைதானத்தில், நகர போலீசார் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பொங்கலிட்டு, வழிபாடு செய்தனர். இதே போல், உடுமலை வலம்புரி விநாயகர் கோவில் முன்பு, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
* பள்ளபாளையத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது.
போட்டிகளை ஒன்றியகுழு உறுப்பினர் உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார். சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கினர்.