/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பரிசு நிராகரிப்பு; பெண்கள் கொதிப்பு!
/
பொங்கல் பரிசு நிராகரிப்பு; பெண்கள் கொதிப்பு!
ADDED : ஜன 09, 2024 01:03 AM

கோவை;கோவை மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், இலவச அரிசி பெறும் கார்டுதாரர்களின் பெயரும் நீக்கப்பட்டு இருப்பதால், பெண்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
நடப்பாண்டு தைப்பொங்கல் கொண்டாடுவதற்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், 11.43 லட்சம் கார்டுதாரர்கள் புழக்கத்தில் உள்ளனர்.
இவர்களில், இலவச அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் வழங்குவது வழக்கம். இதன்படி, பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது.
இந்த முறை, அனைத்து ரேஷன் கடைகளுக்கும், புதிதாக பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பட்டியலில் உள்ள கார்டுதாரர்களுக்கு மட்டும், டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இந்த முறை, பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளாக, எட்டு லட்சத்து, 56 ஆயிரத்து, 824 கார்டுதாரர்கள் பட்டியலிடப்பட்டு உள்ளனர். இதுவரை, ஆறு லட்சத்து, 16 ஆயிரத்து, 913 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், இரண்டு லட்சத்து, 39 ஆயிரத்து, 911 பேருக்கு வழங்க வேண்டியிருக்கிறது.
வாக்குவாதம், பதிவேடு
டோக்கன் கிடைக்காத கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். அதை தவிர்க்க, சில கடைக்காரர்கள், பயனாளிகள் பட்டியலை ஜெராக்ஸ் எடுத்து, கடைக்கு முன் ஒட்டியிருக்கின்றனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
அரிசி பெறும் அனைத்து கார்டுதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு வந்து விட்டது. தற்போது திடீரென நிபந்தனை விதித்திருப்பதால், ஒவ்வொரு கடையிலும், 200 முதல், 400 கார்டுதாரர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. அதனால், ஆளுங்கட்சியினர் உட்பட பெண்கள் பலர் வாக்குவாதம் செய்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்குள், என்னென்ன பிரச்னை வருமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினால், இப்பிரச்னை எழாது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.