/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
/
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
ADDED : ஜன 10, 2024 10:19 PM

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், ரேஷன் கடைகளில் மக்கள் அலைமோதினர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, நேற்று, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியும் துவங்கியது.
அதன்படி, பொள்ளாச்சி தாலுகாவில் 1.33 லட்சம் கார்டுதாரர்களுக்கு, மொத்தம் உள்ள, 147 ரேஷன் கடைகளில், நேற்று முதல் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.
இதனால், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கார்டுதாரர்கள் பலர், காலை, 9:00 மணிக்கே ரேஷன் கடைக்கு சென்றனர். முதல்கட்டமாக, டோக்கன் அளிக்கப்பட்ட அரிசி கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பலரும், மகிழ்ச்சியுடன் அவைகளை வாங்கிச் சென்றனர்.
அதேநேரம், டோக்கன் பெறாத ஏனைய கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்க, ரேஷன் கடை ஊழியர்களை வற்புறுத்தினர். அப்போது, 'மற்ற கார்டுதாரர்களுக்கு உண்டான தொகை கிடைக்கப் பெறவில்லை. அனைத்து கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இரு தினங்கள் கழித்து பணத்துடன் பொங்கல் தொகுப்பு வாங்கிச் செல்லலாம்,' என தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. தாசில்தார் சிவகுமார் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பை ஆய்வு செய்தார். கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில், 3 ரேஷன் கடைகளில், 2,900 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
வால்பாறை
வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 16,079 ரேஷன் கார்டுகளுக்கு, 43 ரேஷன் கடை வாயிலாக பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நேற்று துவங்கியது. கூட்ட நெரிசலை தவிர்க்க முன் கூட்டியே 'டோக்கன்' வழங்கப்பட்டது.
பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா, வால்பாறை சிந்தாமணி ரேஷன் கடையில் துவங்கியது. நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில், வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான், சிந்தாமணி கிளைமேலாளர் அண்ணாத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.
உடுமலை
உடுமலை தாலுகாவிலுள்ள, 182 ரேஷன் கடைகள் வாயிலாக, 94,201 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று முதல், ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் தொகுப்பு வினியோகம் துவங்கியுள்ளது.
இரண்டாவது அறிவிப்பு அடிப்படையில், மேலும், 15,483 பேருக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
உடுமலை தாலுகாவில் மொத்தம், ஒரு லட்சத்து, 8 ஆயிரத்து, 684 பேருக்கு பொங்கல் தொகுப்பு, வரும், 14ம் தேதிக்குள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 63 ரேஷன் கடைகள் வாயிலாக, முதலில், 33,745 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு, நேற்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இரண்டாவது அறிவிப்பின் படி, கூடுதலாக, 3,497 பேர் என, 37,242 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதி ரேஷன் கடைகளில், நேற்று, ஆளும்கட்சியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாயிலாக, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்கியது.
- நிருபர் குழு -

