/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக நேரம் நீட்டிக்க தபால் துறை முடிவு
/
வணிக நேரம் நீட்டிக்க தபால் துறை முடிவு
ADDED : ஜூலை 20, 2025 11:34 PM
கோவை; தபால் துறையில், நாடு முழுவதும், தேவைப்படும் இடங்களில், தபால் நிலையங்களில் வணிக நேரங்களை நீட்டிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தபால் துறை சேவைகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை, துறை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், 10 இலக்க குறியீடு கொண்ட 'டிஜிபின்' என்ற, புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அடுத்ததாக, இரண்டு அல்லது மூன்று தபால் பட்டுவாடா மையங்கள் இணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை மையங்கள்' ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தேவைப்படும் தபால் நிலையங்களில், வணிக நேரங்களை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் வசதி மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை மேம்படுத்தவே இந்த முடிவு.
இதன்படி, வட்டங்கள், பிராந்தியங்கள், குறிப்பாக, பெருநகரங்கள், எம்.எஸ்.எம்.இ.,- இ---காமர்ஸ் கிளஸ்டர்கள், மாவட்ட தலைமையகங்கள், கவுன்டர் வணிக நேரங்களை நீட்டிக்கக் கூடிய பொருத்தமான தபால் நிலையங்களை, அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அனைத்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்களுக்கும், தபால் துறையின் டைரக்டர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார்.
எங்கெங்கு தபால், முன்பதிவு தபால், விரைவு தபால் சேவை அதிகம் நடக்கிறது எங்கெங்கு சேவை அதிகம் தேவைப்படுகிறது என்ற பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
தேவைப்படும் இடங்களில், அடுத்த மாதம் இரண்டாவது வாரம், வணிக நேரத்தை சோதனை முயற்சியாக நீட்டிக்கப்படவுள்ளது. இதற்கு பின், 40 நாட்கள் கழித்து, அதன் செயல்பாடுகளை பொறுத்து, வணிக நேரம் நீட்டிப்பை முறையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.