/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு ரோட்டில் பள்ளம்; திக்திக் பயணம்
/
குடியிருப்பு ரோட்டில் பள்ளம்; திக்திக் பயணம்
ADDED : அக் 01, 2025 11:52 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ஜி.கே., நகர் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட, ஜி.கே., நகர் பகுதியில் (டாஸ்மாக் மதுக்கடை அருகில்) குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதிக்கு செல்லும் பிரதான ரோட்டில் கழிவு நீர் கால்வாய் மேல் மூடி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் முன் சேதம் அடைந்தது. இதனால் இங்கு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவ்வழியாக சென்ற கார், இங்குள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
இதுமட்டுமின்றி, இப்பகுதி அருகில் டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால், போதையில் சிலர் நிலை தடுமாறி இக்குழிக்குள் விழ அதிக வாய்ப்புள்ளது. இப்பகுதியில் தெருவிளக்கு வசதியும் இல்லை.
மாலை நேரத்தில் இங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து சென்று வரும்போது, பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை கவனத்துடன் கடக்கும் நிலை உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.