/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'3ஏ1' மின் இணைப்பில் மின்வாரியம் வார்த்தை விளையாட்டு!: குறுந்தொழில் முனைவோர் வேதனை
/
'3ஏ1' மின் இணைப்பில் மின்வாரியம் வார்த்தை விளையாட்டு!: குறுந்தொழில் முனைவோர் வேதனை
'3ஏ1' மின் இணைப்பில் மின்வாரியம் வார்த்தை விளையாட்டு!: குறுந்தொழில் முனைவோர் வேதனை
'3ஏ1' மின் இணைப்பில் மின்வாரியம் வார்த்தை விளையாட்டு!: குறுந்தொழில் முனைவோர் வேதனை
ADDED : நவ 09, 2024 11:31 PM

கோவை: குறுந்தொழில் நிறுவனங்கள், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும்பட்சத்தில், '3ஏ1' கட்டண விகிதத்தை நிர்ணயிப்பதற்குப் பதில், மின்வாரியம் வார்த்தைகளால் விளையாடுவதாக, குறுந்தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பொதுவாக, '3 பி' பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால், 15 ஹெச்.பி., அல்லது 12 கிலோவாட் திறன் வரை பயன்படுத்தினால், '3 ஏ1' என்ற பிரிவில், மின் இணைப்பு வழங்க, மின்வாரிய விதிமுறைகளில் இடமிருக்கிறது.
இந்த '3 ஏ1' பிரிவு மின் இணைப்புக்கு, பீக் ஹவர் கட்டணம் கிடையாது. 500 யூனிட் வரை பயன்படுத்தினால், கட்டணமும் குறைவு. ஆனால், குறுந்தொழில் நிறுவனங்கள் மின் இணைப்பு விண்ணப்பித்தால், '3பி' பிரிவில் மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.
குறு நிறுவனங்களின் பல்வேறுகட்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு இதுதொடர்பாக விளக்கக் கடிதம் வெளியிட்டது. இதன்பிறகும், '3 ஏ1' கட்டண விகிதத்துக்கு மாற்றிக் கொடுக்காமல், அதற்குத் தனியே விண்ணப்பிக்க வேண்டும் என, மின்வாரியம் தவிர்த்து வந்தது.
மின்வாரியத்திடமே போதிய விவரங்கள் இருக்கும் நிலையில், மென்பொருளில் மாற்றம் செய்து, தாமாகவே தகுதியுடைய அனைத்து மின் இணைப்புகளும் '3 ஏ1' இணைப்பாக மாற்றப்பட வேண்டும் என, தொழில் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, புதிதாக விதிமுறை ஒன்றைக் கண்டறிந்து, '3 ஏ1' இணைப்பை மின்வாரியம் மீண்டும் தட்டிக் கழித்து வருவதாக, குறுந்தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
சட்டரீதியான சலுகை
குறுந்தொழில் முனைவோர் கூறியதாவது:
நாங்கள் கேட்பது சட்டப்படியான சலுகை. இதைக் கேட்டாலும், உதயம் பதிவு, தொழில் வகைமை, போதிய ஆவணங்கள் இல்லை எனப் பல்வேறு காரணங்களால், மின்வாரியம் '3 ஏ1' இணைப்பு தர மறுத்து வந்தது.
மின்வாரிய நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பு (சி.ஜி.ஆர்.எப்.,), ஆணையம், அமைச்சர் என அனைத்துத் தரப்பிடமும் கோரிக்கை விடுத்தோம்; அரசு ஏற்றுக் கொண்டாலும், மின் வாரியம் ஏற்பதாக இல்லை.
தமிழக அரசே இதுதொடர்பாக, விளக்கக் கடிதம் அளித்து விட்டது. தற்போது, மின்வாரியம் 'கனெக்டட் லோடு' 'கான்ட்ராக்ட் டிமாண்ட்' என சொற்களை வைத்து விளையாடி வருகிறது.
அதாவது, 12 கிலோவாட் வரை இருந்தால் '3ஏ1' இணைப்புத் தர வேண்டும் என்பது விதி. இந்தக் கட்டண விகிதப்படி, குறுந்தொழில் முனைவோர் ஒருவர் 5 கிலோவாட் இணைப்புக் கோரிதான் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், ஆய்வுக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், 'கனெக்டட் லோடு' அதிகமாக உள்ளது எனக் கூறி, விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர்.
அந்த ஆலையில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் ஒரே சமயத்தில் இயங்குவதாக வைத்துக் கொண்டால், அவற்றின் ஒட்டுமொத்த திறனையும் கூட்டினால் வருவது 'கனெக்டட் லோடு'. இது, 12 கிலோவாட்டை விட அதிகமாக இருக்கிறது எனக் கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்க ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக, விதிகளை அலசி ஆராய்ந்து, இதை கண்டறிந்து, செயல்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உரிய சலுகையை கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.