/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
/
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
ADDED : ஜூலை 23, 2025 09:11 PM

பொள்ளாச்சி; பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கும் வகையில், சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சிமலையில் பெய்த தொடர் மழையால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவினர், ஆலோசனை மேற்கொண்டனர்.
அதில், வரும், 27ம் தேதி முதல் நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 135 நாட்களில் உரிய இடைவெளியில் ஐந்து சுற்று தண்ணீர் வழங்கவும், மொத்தம், 10,650 மில்லியன் கனஅடி நீர் வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. இதன் வாயிலாக, 94,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இதேபோன்று, முதலாம் மண்டல பாசனத்துக்கும், ஐந்து சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு, ஷட்டர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மதியம், 2:15 மணிக்கு துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளில் இருந்து சர்க்கார்பதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டு திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சர்க்கார்பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில், இன்று (நேற்று) முதல் வினாடிக்கு 630 கனஅடி நீர் திறக்கப்பட்டு, 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரித்து, மின் உற்பத்தியும் அதிகரிக்கப்படும்.
இங்கிருந்து காண்டூர் கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீர், திருமூர்த்தி அணையில் இருப்பு வைத்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு வினியோகிக்கப்படும். தற்போது, துாணக்கடவு அணையில் நீர் இருப்பு உள்ளதால் சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் அணையில் இருந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.