ADDED : மே 06, 2025 11:01 PM
சோமனூர்: கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கண்டபின், விசைத்தறி ஜவுளி தொழில் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. சுமார், 1.50 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.
95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கியதால், விசைத்தறியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
கடந்த ஆண்டு ஜன., மாதம் முதல் புதிய கூலி உயர்வு கேட்டு விசைத்தறி கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால், கடந்த பிப்., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்ச், 19 ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தையில், புதிய கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, விசைத்தறிகள் இயங்க துவங்கின.
இதுகுறித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி கூறுகையில், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பின், விசைத்தறி ஜவுளி தொழில் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. விசைத்தறிகள் முழுமையாக இயங்க துவங்கியுள்ளன.
ஏற்கனவே இருக்கும் பாவு நூல்களை கொண்டு துணி உற்பத்தி நடந்து வருகிறது. தற்போது, ஜவுளி உற்பத்தியாளர்கள் புதிய பாவு நூல்களை விசைத்தறியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். புதிய கூலியின் அடிப்படையில் வரவு - செலவு கணக்குகள் துவங்கியுள்ளன. வரும் நாட்களில் அனைத்து விசைத்தறிகளும் முழுமையாக இயங்க துவங்கிவிடும், என்றார்.
