/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயுதபூஜைக்கு ஆயத்தம்! வீடு, தொழில் நிறுவனங்களில் கொண்டாட்டம்; மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தாச்சு கரும்பு
/
ஆயுதபூஜைக்கு ஆயத்தம்! வீடு, தொழில் நிறுவனங்களில் கொண்டாட்டம்; மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தாச்சு கரும்பு
ஆயுதபூஜைக்கு ஆயத்தம்! வீடு, தொழில் நிறுவனங்களில் கொண்டாட்டம்; மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தாச்சு கரும்பு
ஆயுதபூஜைக்கு ஆயத்தம்! வீடு, தொழில் நிறுவனங்களில் கொண்டாட்டம்; மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தாச்சு கரும்பு
ADDED : அக் 09, 2024 10:17 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதிகளில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையையொட்டி, கரும்பு விற்பனை துவங்கியுள்ள நிலையில், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இந்தாண்டு விழாவை விமரிசையாக கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையன்று பொதுமக்கள், வீடுகள் மற்றும் கடைகளில் வழிபாடு செய்வர்.
நடப்பாண்டு நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் தினமும் கொலு அமைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வீடுகளிலும் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்கின்றனர். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாளை துவங்குகிறது.
நடப்பாண்டு பண்டிகையை விமரிசையாக கொண்டாட மக்கள் ஆயத்தமாகின்றனர்.நவராத்திரி விழா துவங்குவதற்கு முன்பே வீடுகள், தொழில் நிறுவனங்களை சுத்தம் செய்து, வழிபாடு செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் கரும்புவிற்பனை துவங்கியுள்ளது. பூஜைக்கு தேவையான, பூமாலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் அதிகளவு ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
விற்பனை துவக்கம்
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சேலத்தில் இருந்து, கரும்பு வரத்து வரத்துவங்கியுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு மழைப்பொழிவு காரணத்தால், வரத்து குறைந்துள்ளது.
கடந்தாண்டு, 40 - 60 லோடு கரும்பு வந்துள்ள நிலையில், தற்போது, அனைத்து கடைகளுக்கும் சேர்த்து, 10 லோடு கரும்பு மட்டுமே வந்துள்ளது. வரத்து மிக குறைவு என்றாலும், கடந்தாண்டு விலையே உள்ளது.
ஒரு கட்டு (15 கரும்பு) 400 - 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், விற்பனை விறு, விறுப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாழைத்தார் ஏலம்
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.நேற்றைய நிலவரப்படி, மொத்தம், இரண்டாயிரம் வாழைத்தார்கள் ஏலத்துக்கு வந்தன.
ஒரு கிலோ பூவன் பழம், 43 ரூபாய், கற்பூரவள்ளி - 40, செவ்வாழை - 75, கதளி - 55, நேந்திரம் - 38, மோரிஸ் - 32 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோன்று, வாழைக்கன்றுகள், வாழை இலை வரத்தும் அதிகரித்துள்ளது. அவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடக்கிறது.
வியாபாரிகள் கூறுகையில், 'வாழைத்தார் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு விலையும் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 4 - 5 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது. இதுபோன்று, பொரி கடலை உள்ளிட்டவை விற்பனை நடப்பாண்டு விறுவிறுப்பாக இருக்கும்,' என கூறினர்.