/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு பலகாரங்கள் தயாரிப்பு மும்முரம்! வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுரை
/
தீபாவளிக்கு பலகாரங்கள் தயாரிப்பு மும்முரம்! வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுரை
தீபாவளிக்கு பலகாரங்கள் தயாரிப்பு மும்முரம்! வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுரை
தீபாவளிக்கு பலகாரங்கள் தயாரிப்பு மும்முரம்! வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுரை
ADDED : அக் 21, 2024 11:31 PM

பொள்ளாச்சி : தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெறுவதுடன், வாடிக்கையாளர்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக, மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், முன்கூட்டியே புத்தாடை வாங்க, கடைவீதிகளில் குடும்பத்தினருடன் திரண்டு வருகின்றனர்.
மேலும், தீபாவளி தினத்தன்று, இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களை வாங்கி ருசிப்பதும், அதனை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வதும் வழக்கம். இதை கருத்தில் கொண்டு, இனிப்பகங்கள் மட்டுமின்றி, தீபாவளி சீட்டு நடத்துவோர், தற்காலிக இனிப்பகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், பலகார தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்த கடைகளில், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக, இனிப்பு, கார வகைகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை சேர்க்கக் கூடாது. தயாரிப்பு, காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும்.
உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதலின்போது, பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம் அணிய வேண்டும். பலகாரங்கள் தயாரிக்குமிடம் மற்றும் விற்கும் இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.
தயாரிக்கப்பட்ட பலகாரங்களை கையால் தொடுவதை தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்று பெறுவதுடன், வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
தீபாவளி இனிப்புகள், கார வகைகள் தயாரிப்புக்கு, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இனிப்பு, காரவகைகளை, தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்து விற்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. விதிமீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், தீபாவளி இனிப்பு வகைகளில் குறைகள் கண்டறிந்தால், 'tnfoodsafety consumer' என்ற மொபைல் ஆப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.
பொதுமக்களும், கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் காலாவதி, தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். காலாவதியான இனிப்பு, கார வகைகளை காலாவதி தேதி கடந்து உட்கொண்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மக்களும் கவனம் செலுத்தி, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி தெரிந்து வாங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.