ADDED : ஏப் 23, 2026 06:27 AM

கோவை: மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3,540 ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஓட்டுப்பதிவு விவரங்களை உடனுக்குடன் இணையதளம் வாயிலாகப் பதிவேற்ற தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
போதிய நெட்வொர்க் வசதி இல்லாத அல்லது சிக்னல் குறைவாக உள்ள பகுதிகளில் ஓட்டுப்பதிவு சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த, சிறப்பு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 65 நிழல் ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வால்பாறை சட்டசபை தொகுதியில் 22 ஓட்டுச்சாவடி மையங்கள் நெட்வொர்க் குறைபாடு உள்ளவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல், கவுண்டம்பாளையம் தொகுதியில் 5 மையங்களிலும் இதே சிக்கல் உள்ளது. இந்த 27 மையங்கள் உட்பட 65 மையங்களிலும் ஓட்டுப்பதிவு நடவடிக்கைகள் துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.
ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாகச் சரிசெய்ய, 'பெல்' நிறுவன தொழில்நுட்பப் பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலர் கலராக ஓட்டுச்சாவடிகள்! ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு ஓட்டுச்சாவடியில், புதிய வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி, பெண்களுக்கான ஓட்டுச்சாவடி, மாடல் ஓட்டுச்சாவடி, பசுமை ஓட்டுச்சாவடி அமைக்கப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி தெலுங்குபாளையம் அரசு பள்ளியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடி மையத்தில், நீல நிற அலங்காரங்களுடன், புது வாக்காளர்கள் ஓட்டுச்சாவடியும், பிங்க் நிற அலங்காரங்களுடன் பெண்கள் ஓட்டுச்சாவடியும், ஊதா நிற அலங்காரங்களுடன் மாடல் ஓட்டுச்சாவடியும், தென்னை ஓலை, வாழை மரத்தோரணம், பூ அலங்காரத்துடன் பசுமை ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
பசுமை ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு செய்பவர்களுக்கு, இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. மண்பானையில் குடிநீர் வைத்துள்ளனர். செல்பி பாயின்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை வடக்கு தொகுதி வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தான பள்ளி ஓட்டுச்சாவடி மையத்திலும், புதிய வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி, பெண்கள் ஓட்டுச்சாவடி, மாடல் ஓட்டுச்சாவடி, பசுமை ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பசுமை ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு விதைகள், பென்சிலுடன் கூடிய விதைகள், மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
