/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்! 6ம் தேதி நடக்கிறது
/
மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்! 6ம் தேதி நடக்கிறது
மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்! 6ம் தேதி நடக்கிறது
மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்! 6ம் தேதி நடக்கிறது
ADDED : ஆக 02, 2024 05:26 AM

கோவை : 'கோவை மேயர் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல், வரும், 6ம் தேதி காலை, 10:30 மணிக்கு விக்டோரியா ஹாலில் நடக்கும்' என, தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த, தி.மு.க,,வை சேர்ந்த, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, உடல் நிலை மற்றும் மருத்துவ காரணங்களை கூறி, மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம், சிறப்பு மாமன்ற கூட்டம் நடத்தி ஏற்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.
இதன்பின், மேயர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்பதவிக்கு புதியவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அறிவுறுத்தல், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாருக்கு வழங்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை கமிஷனர் செல்வசுரபி ஆகியோரை கலெக்டர் நியமித்தார். மறைமுகத் தேர்தல் தொடர்பான அறிவிக்கை, அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 'வரும், 6ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை, 10:30 மணிக்கு விக்டோரியா ஹாலில், மறைமுகத் தேர்தல் நடத்தப்படும். வார்டு கவுன்சிலர்களில் இருந்து ஒருவர், மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்' என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
மாநகராட்சியில் மொத்தம், 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 96 பேர் தி.மு.க., கூட்டணியை சேர்ந்தவர்கள். அதனால், போட்டி இருக்காது. தி.மு.க., தலைமை அறிவிக்கும் மேயர் வேட்பாளர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்.
அவர் சமர்ப்பிக்கும் வேட்பு மனுவை, ஒரு கவுன்சிலர் முன்மொழிவார்; இன்னொரு கவுன்சிலர் வழிமொழிவார். வேட்பு மனு தாக்கல் செய்ய வழங்கும் கால அவகாசம் வரை வேறொருவர் மனு தாக்கல் செய்கிறாரா என தேர்தல் நடத்தும் அலுவலர் காத்திருப்பார். வேறு கவுன்சிலர்கள் மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், போட்டியின்றி மேயர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து, அதற்கான சான்றிதழை, புதிய மேயரிடம் தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வழங்குவார்.
பின், மேயருக்கான அங்கி அணிந்து சபைக்கு அழைத்து வரப்படுவார்; அவருக்கு செங்கோலை மாநகராட்சி கமிஷனர் வழங்கி, இருக்கையில் அமர வைப்பார்.
தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும், பிரதான கட்டடத்தில அமைந்துள்ள மேயர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமர வைக்கப்படுவார். பின், அலுவல் பணியை புதிய மேயர் கவனிக்கத் துவங்குவார்.