UPDATED : நவ 19, 2026 07:24 PM
ADDED : நவ 19, 2026 07:22 PM
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே, பவானி ஆற்றின் கரையோரம், யானைகள் புத்துணர்வு நல வாழ்வு முகாம் நடைபெற உள்ளது. இந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது.
இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து கோயில்கள் மற்றும் தனியார் மடங்களில், வளர்க்கப்படும் யானைகள் இடம் பெற உள்ளன. ஒவ்வொரு யானையுடனும் இரண்டு பாகன்கள் வருவர். இந்த முகாமில் பாகன்கள் தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய கொட்டகைகள் அமைக்கப்படும்.
முகாம் நடைபெறும் இடத்தில், பாகன்கள் தங்கும் கொட்டகைகள், சமையல் கூடம், உணவு அருந்தும் கூடம், பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகள் ஆகியவை அமைக்க, அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன.
இதில் கோவை ஹிந்து சமய அறநிலைத்துறை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கவேல், உதவி பொறியாளர் தினேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
