/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்கலாம்! வேளாண்துறை தொழில்நுட்ப ஆலோசனை
/
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்கலாம்! வேளாண்துறை தொழில்நுட்ப ஆலோசனை
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்கலாம்! வேளாண்துறை தொழில்நுட்ப ஆலோசனை
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்கலாம்! வேளாண்துறை தொழில்நுட்ப ஆலோசனை
ADDED : அக் 27, 2025 09:59 PM
கிணத்துக்கடவு: பயிர் சாகுபடியில், மழை வெள்ளத்தால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்க வேளாண்துறை சார்பில், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில், நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் தற்போது வரை, 448 ெஹக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை பருவ பயிர்கள் அறுவடை பருவத்திலும், சம்பா பருவ நெல் பயிர்கள் நடவு மற்றும் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது.
நெல் வயல்களில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கியிருக்கும் போது, போதிய காற்றோட்டம் இல்லாமல் மண்ணிலுள்ள சத்துகள் மழை நீருடன் கலந்து வெளியேறுவதால், போதிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், நெற்பயிரின் இலைகள் வெளிரி மஞ்சள் நிறமாக மாறி பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
இதை தவிர்க்க, சில தொழில்நுட்ப ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். வயலைச் சுற்றி நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி, வயலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான மழை நீரினை வடித்து, பயிரின் வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.
மழை காலங்களில் வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும், உரம் இடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களில், நீர் வடிந்தவுடன் ஒரு ஏக்கருக்கு, 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் ஆகியவற்றுடன், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு வைத்திருந்து, 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன் கலந்து இட வேண்டும்.
போதிய சூரிய வெளிச்சம் வந்தவுடன் ஏக்கருக்கு, 2 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை, 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் வாயிலாக இலை வழி ஊட்டமாக தெளிக்க வேண்டும்.
தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு, ஏக்கருக்கு, 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை, 10 லிட்டர் தண்ணீரில், 12 மணி நேரம் ஊர வைத்து, பின் தெளிந்த கரைசலை வடித்தெடுத்து, 2 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை சேர்த்து, 190 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் வாயிலாக தெளிக்க வேண்டும்.
எனவே, நெல் சாகுபடி உள்ள ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் விவசாயிகள் இத்தொழில் நுட்பங்கள் அனைத்தையும் கடைபிடித்து உயர் விளைச்சலை பெறலாம். இத்தகவலை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி தெரிவித்தார்.

