ADDED : ஏப் 22, 2026 07:56 PM
நெகமம்: கொப்பரை விலை குறைவால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்துள்ளனர்.
நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் இருப்பதால், விவசாயிகள் பலர் தேங்காய் மற்றும் கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்களை, நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏல முறையில் விற்பனை செய்கிறார்கள்.
இங்கு உடனுக்குடன் விளைபொருள் விற்பனையாகி பணம் கிடைப்பதால், விற்பனை கூடத்தின் வாயிலாக வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது விற்பனை கூடத்தில் ஒரு கிலோ, முதல் தர கொப்பரை, 110 முதல் 154 வரை விற்பனை ஆகிறது.
இதனால் விவசாயிகள் பலர், 1,500 மூட்டைகளுக்கும் (50 கிலோ) அதிகமாக அளவில், விலை உயரும் போது விற்பனை செய்ய இருப்பு வைத்துள்ளனர்.
தென்னை விவசாயிகள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், தேங்காயின் வரவு கணிசமாக குறைந்து வருகிறது. மேலும், தேங்காய் உரிக்கும் வட மாநில பணியாளர்கள் பலர் தேர்தலுக்காக அவர்களது ஊருக்கு சென்றுள்ளனர். இதனால், பணியாட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் கொப்பரையை, விற்பனை கூடத்தில் இருப்பு வைத்துள்ளனர்,' என்றார்.
