/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும்! தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்
/
தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும்! தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்
தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும்! தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்
தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும்! தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 11, 2025 10:27 PM
பொள்ளாச்சி: அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 2026ல், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். அவ்வகையில், அதற்கான விபரங்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கோரப்பட்டு, பணி நியமன பட்டியல் தயாரிக்கப்பட்டும் வருகிறது.
அவ்வகையில், கோவை மாவட்டத்தில், நடப்பு ஆண்டு பணி ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்கள், கர்ப்பிணிகள், நோயுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக்களிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும், தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க கோரியுள்ளனர்.
இது குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும், 5க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். குறிப்பாக, ஓட்டுப்பதிவு நாளுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாளை கணக்கிட்டு, மூன்று நாட்கள், அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,விடம் முன்னதாகவே அந்தந்த பள்ளி ஒப்படைக்கப்படும்.
ஆனால், பள்ளியில் காவலாளிகள், துாய்மைப் பணியாளர்கள் இல்லாத நிலையில், மூன்று நாட்கள் தங்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிரமம் ஏற்படுகிறது.
தண்ணீருக்கான மின்மோட்டார் இயக்குவதிலும், உரிய அறையை ஒதுக்கி தருவதிலும் சிக்கல் நீடிக்கிறது. அந்த பள்ளி தலைமையாசிரியருக்கு வேறு இடத்தில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதே இதற்கு காரணம். இதுஒருபுறமிருக்க, ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டவுடன் பள்ளியை பூட்டி பாதுகாக்கவோ, இருக்கை உள்ளிட்டவைகளை முறைபடுத்தி வைக்கவோ எவரும் முனைப்பு காட்டுவதில்லை. இதனால், பள்ளி சொத்து பாதிக்கிறது.
எனவே, தேர்தல் பணியில் இருந்து விலக்களித்தால், ஓட்டுச்சாவடி அமைக்கப்படும் அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர், தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருவதுடன் பள்ளியில் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
இவ்வாறு, கூறினர்.

