தட்கல் மின் இணைப்பு கட்டணம் செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை
தட்கல் மின் இணைப்பு கட்டணம் செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை
UPDATED : அக் 30, 2026 06:51 PM
ADDED : அக் 30, 2026 06:47 PM
கோவை: தட்கல் மின் இணைப்பு திட்டத்தில், 2025 டிச., 16 முதல் 31 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்தில் 15,000 விவசாயிகள் கட்டணம் செலுத்தி காத்திருக்கின்றனர்.
நடப்பு நிதியாண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில், தட்கல் திட்டத்தில் 10,000 இணைப்புகள் வழங்க உள்ளதாகவும், கடந்த டிச., 16, 17 காலை 10:50 மணி வரை கட்டணம் செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பெரியசாமி, ‘‘தட்கல் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் ஆழ்துளை கிணறு அமைத்து, மோட்டார் பம்ப் செட் வசதி ஏற்படுத்தியுள்ளனர். ரூ.7.5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். மின் இணைப்பு கிடைக்காததால் சாகுபடியை தொடங்க முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். முழு கட்டணம் செலுத்திவிட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விரைவாக இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மாநிலத்திற்கு 25 ஆயிரம் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனுப்பப்பட்ட பிறகு, சீனியாரிட்டி அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்படும்' என்றனர்.
