ADDED : அக் 30, 2026 06:51 PM
குனியமுத்தூர்:
இடையர்பாளையம்,அம்மன் காலனியில் கேரளாவுக்கு கடத்திச் செல்ல ரேஷன் அரிசி ஒரு வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக, குடிமை பொருள் வழங்கல் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்று (அக்.,30) காலை எஸ்.ஐ. கார்த்திக் மற்றும் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றனர். வீட்டருகே நின்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்த மூட்டைகளை பிரித்த போது, ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. தலா, 50 கிலோ வீதம், 44 மூட்டைகளில், 2.2 டன் அரிசி இருந்தது. அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வீட்டிலிருந்தவரிடம் நடத்திய விசாரணையில், தங்கபாண்டியன், 36 என்பதும், குனியமுத்தூர், இடையர்பாளையத்திலுள்ள வீடுகளில், ஆதரவற்றோர் காப்பகத்துக்கு என கூறி, அரிசியை பெற்று, கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார்.
