/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறைக்குள் கைதி கொலை? 10 பேரிடம் விசாரணை
/
சிறைக்குள் கைதி கொலை? 10 பேரிடம் விசாரணை
ADDED : பிப் 02, 2025 01:49 AM
கோவை:கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, 10 பேர் மீது சந்தேகம் இருப்பதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ், 33. இவர், 2012ல் திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜன., 27ல் சிறை வளாக தொழிற்சாலை கழிப்பறைக்குள், சுயநினைவின்றி கிடந்ததாக, கோவை அரசு மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர். ஏசுதாஸ் உயிரிழந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். பிரேத பரிசோதனையில், கழுத்து எலும்பு உடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
ரேஸ்கோர்ஸ் போலீசார் சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து, நான்கு தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர். கோவை, மாஜிஸ்திரேட் கிருத்திகாவும் விசாரணை நடத்தினார்.
மூன்று முதல் நான்கு பேர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலையில் மேலும், 10 பேர் மீது, போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது. ஒவ்வொருவரிடமும் விசாரணை நடக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக துணை சிறை அலுவலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், முதல் நிலை தலைமை காவலர் பாபுராஜ், முதல் நிலை காவலர் தினேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.