/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் கல்லுாரி மாணவர் பட்டியல் சரிபார்ப்பு தீவிரம்
/
தனியார் கல்லுாரி மாணவர் பட்டியல் சரிபார்ப்பு தீவிரம்
தனியார் கல்லுாரி மாணவர் பட்டியல் சரிபார்ப்பு தீவிரம்
தனியார் கல்லுாரி மாணவர் பட்டியல் சரிபார்ப்பு தீவிரம்
ADDED : பிப் 04, 2026 05:22 AM
கோவை: நமது 'தினமலர்' செய்தி எதிரொலியாக, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் தனியார் கல்லூரி மாணவர்களின் பட்டியல் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.
அரசு கல்லூரியை தொடர்ந்து, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் 111 தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 'புதுமைப்பெண்', 'தமிழ்ப் புதல்வன்', 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' ஆகியவற்றில் பயன்பெறுவோர் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், 30 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 1,185 லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், தகுதியான பல மாணவர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டதாக புகார்கள் எழுந்தன. பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பில் விவரங்கள் சரியாக பதிவேற்றப்பட்டிருந்த போதிலும், தகுதியான பல மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என கூறப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி நமது 'தினமலர்' நாளிதழில் ஜன.31 அன்று செய்தி வெளியானது.
இதனையடுத்து, மாணவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அதிகாரிகள் கூறுகையில், 'கல்லூரிகள் சமர்ப்பித்த பட்டியலின் அடிப்படையில் லேப்டாப் வழங்கப்படுகின்றன. எங்கள் தரப்பிலும், கல்லூரி தரப்பிலும் உள்ள புள்ளிவிவரங்கள் சரியாக உள்ளனவா என்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சட்டக்கல்லூரி எல்.எல்.பி., மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அரசுதான் இறுதி முடிவெடுக்க வேண்டும், என்றனர்.

