/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு வாகன சோதனை சாவடியில் சிக்கல் வர்த்தக இ--பாஸ் ஒருமுறை ஸ்கேன் ஆவதால்...
/
கல்லாறு வாகன சோதனை சாவடியில் சிக்கல் வர்த்தக இ--பாஸ் ஒருமுறை ஸ்கேன் ஆவதால்...
கல்லாறு வாகன சோதனை சாவடியில் சிக்கல் வர்த்தக இ--பாஸ் ஒருமுறை ஸ்கேன் ஆவதால்...
கல்லாறு வாகன சோதனை சாவடியில் சிக்கல் வர்த்தக இ--பாஸ் ஒருமுறை ஸ்கேன் ஆவதால்...
ADDED : ஏப் 29, 2025 12:17 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லாறு இ--பாஸ் சோதனை சாவடியில் வர்த்தக இ--பாஸ் ஒரு முறை மட்டுமே ஸ்கேன் ஆகிறது. அடுத்த முறை ஸ்கேன் ஆவதில்லை. இதனால் அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் கார் போன்ற வாகனங்களுக்கு இ---பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகேயும், கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகேயும் இ--பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட வாகனங்கள், அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் போன்றவற்றிக்கு இ--பாஸ் கிடையாது. ஆனால் வெளியூர் டூரிஸ்ட் மற்றும் தனி நபர் வாகனங்களுக்கு இ--பாஸ் எடுக்க வேண்டும். இந்த இ-பாஸ்கள் வாகனத்தின் பதிவு எண்ணுக்குத் தான் வழங்கப்படுகின்றன.
இது தவிர அடிக்கடி பணி நிமித்தமாக நீலகிரி மாவட்டத்திற்கும் வரும் வெளியூரை சேர்ந்த மருத்துவ பிரதிநிதிகள், இன்ஜினியர்கள் ஆகியோர் காரில் வரும் போது வர்த்தக இ-பாஸ் எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் இந்த இ-பாஸ்கள் காரில் வருபவர்களின் மொபைல் எண்ணுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. ஒரு முறை மொபைல் எண் பதிவு செய்து வர்த்தக இ-பாஸ் எடுத்து விட்டால் ஒரு மாதத்துக்கு அந்த இ-பாஸை காண்பித்து நீலகிரிக்கு சென்று வரலாம்.டூரிஸ்ட் இ-பாஸ் மற்றும் வர்த்தக இ-பாஸ் ஆகியவற்றுக்கு கட்டணம் கிடையாது. இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு வர்த்தக பாஸ் பெற்றவர்கள் ஒவ்வொரு முறையும் இ--பாஸ் சோதனை சாவடி வழியாக செல்லும் போது, ஸ்கேன் ஆனது. இந்த நடைமுறையில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் இந்த இ-பாஸ்கள் பூம் பேரியர் வந்ததில் இருந்து ஒரு முறை மட்டுமே ஸ்கேன் ஆகிறது. அடுத்த முறை வரும் போது ஸ்கேன் ஆகாமல் பாஸ் காலாவதி ஆகிவிட்டது என காண்பிக்கிறது. மீண்டும் பாஸ் எடுக்கலாம் என்றால், அதே மொபைல் எண்ணில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நாட்கள் நிறைவடையாமல், வர்த்தக இ-பாஸ் எடுக்க முடிவதில்லை. இதனால் அந்த வாகனங்கள் நீலகிரி எல்லையில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக இ--பாஸ் சோதனை சாவடி ஊழியர்களுக்கும், வர்த்தக இ-பாஸ் உள்ளவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, இ-வர்த்தக பாஸ் பெற்ற ஒருவர் கூறுகையில், நான் மருத்துவ துறையில் பணி புரிகிறேன். பணி நிமித்தமாக நீலகிரி மாவட்டத்திற்கு வாரம் ஒரு முறை வந்து செல்வது வழக்கம். என்னிடம் ஒரு மாதம் காலம் செல்லக்கூடிய வர்த்தக இ--பாஸ் உள்ளது. கடந்த வாரம் வந்த நிலையில் ஒரு முறை இ--பாஸ் ஸ்கேன் ஆனது. அடுத்த முறை வரும்போது இ-பாஸ் காலாவதி ஆகிவிட்டது என வருகிறது.
மீண்டும் பாஸ் போடலாம் என்றால், ஒரு மாதம் முடியாமல், பாஸ் போட முடியாது என இ--பாஸ் சோதனை சாவடி ஊழியர்கள் கூறுகின்றனர். இதற்கு தீர்வு இல்லை. மீண்டும் நான் ஊட்டிக்கு செல்ல தற்போது வேறு மொபைல் எண் வேண்டும். இந்த கோளாறை நீலகிரி மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும், என்றார்.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், பழைய நடைமுறையில் வர்த்தக இ-பாஸ் எத்தனை முறை ஸ்கேன் ஆனாலும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பூம் பேரியர் வந்ததில் இருந்து ஒரு முறை மட்டுமே ஸ்கேன் ஆகிறது. வர்த்தக இ--பாஸ் ஸ்கேன் ஆகவில்லை என்றால் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றனர்.