குடிநீர் வினியோகத்தில் சிக்கல் காலி குடங்களுடன் மறியல்
குடிநீர் வினியோகத்தில் சிக்கல் காலி குடங்களுடன் மறியல்
UPDATED : அக் 04, 2026 12:01 AM
ADDED : அக் 03, 2026 11:58 PM
உடுமலை: உடுமலை அருகே, 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால், காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியம், பூளவாடி ஊராட்சியில், 5,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியில், குடிநீர் வினியோகத்தில் குளறுபடி ஏற்படுவதோடு, 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டது. ஆத்திரமடைந்த பெண்கள் பலர், காலி குடங்களுடன், பூளவாடி ஊராட்சி மன்றஅலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அங்கு, அதிகாரிகள் யாரும் இல்லாததால், பூளவாடி நான்கு ரோடு சந்திப்பு, கடை வீதி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
உடுமலை தாசில்தார் அருணா, குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, குடிமங்கலம் பி.டி.ஓ., (ஊராட்சிகள்) நாட்ராயன் மற்றும் அதிகாரிகள் சென்று, ‘இரு நாட்களில் குடிநீர் வினியோகம் சீராகும்,’ என உறுதியளித்ததால், மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட உதவி இயக்குனர், ஊராட்சிகள் தணிக்கை அலுவலர் கமலக்கண்ணன், குடிமங்கலம் பி.டி.ஓ., நாட்ராயன், திருமூர்த்தி குடிநீர் திட்ட உதவி பொறியாளர் சின்னச்சாமி ஆகியோர், பூளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வுசெய்தனர்.
