/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாலகங்களை தரம் உயர்த்தாமல் சிக்கல்! வசதிகளையும் மேம்படுத்தணும்
/
நுாலகங்களை தரம் உயர்த்தாமல் சிக்கல்! வசதிகளையும் மேம்படுத்தணும்
நுாலகங்களை தரம் உயர்த்தாமல் சிக்கல்! வசதிகளையும் மேம்படுத்தணும்
நுாலகங்களை தரம் உயர்த்தாமல் சிக்கல்! வசதிகளையும் மேம்படுத்தணும்
ADDED : ஜூன் 19, 2025 07:41 AM
உடுமலை : உடுமலை பகுதி கிராமங்களிலுள்ள, நுாலகங்களை தரம் உயர்த்தி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், கிராமப்புற மாணவர்களும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களும் பயன்பெறுவார்கள்.
உடுமலை பகுதியில், அரசு பள்ளிகள் தரம் உயர்வு உட்பட காரணங்களால், கல்வியறிவு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், அரசு பணிக்காக, போட்டித்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு, போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உட்பட கிராமப்புறங்களில் அனைத்து தரப்பினருக்கும் நுாலகங்கள் பல்வேறு வகையில் உதவி வருகின்றன. ஆனால், அங்கு கட்டமைப்பு வசதிகள் போதியளவு மேம்படுத்தப்படாமல், வாசகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. செல்லப்பம்பாளையம், சின்னவீரம்பட்டி, தேவனுார்புதுார், உட்பட ஊர்ப்புற நுாலகங்கள் பல ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.
காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:30 மணி வரை மட்டுமே இந்நுாலகங்கள் செயல்படும்.
இந்த நுாலகங்களை கிளை நுாலகமாக தரம் உயர்த்தி, கட்டடம் உட்பட அனைத்து வசதிகளையும் மேம்படுத்த, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஊர்ப்புற நுாலகங்கள் பெரும்பாலும், சொந்த கட்டடத்தில் இயங்கி வந்தாலும், தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இப்பகுதியில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உடுமலை நுாலகத்திற்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.
தளி, ஜல்லிபட்டி, வாளவாடி, பூளவாடி ஆகிய கிளை நுாலகங்கள் முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டும், குறிப்புதவி பகுதிக்கு தனியாக கட்டடம் இல்லை.
போடிபட்டி உள்ளிட்ட நுாலகங்களில் கூடுதல் கட்டடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கணியூர் நுாலக கட்டடமும் புதுப்பிக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு வாயிலாக நுாலகங்கள் மேம்பாட்டிற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.