ADDED : ஜன 08, 2026 05:03 AM
கோவை: அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. துாரத்துக்கு கட்டியுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் பயன்பாட்டில் உள்ளது. இரு மார்க்கமாகவும் தலா இரு இடங்களில் ஏறு தளம், இறங்கு தளம் கட்ட வேண்டும்.
பி.ஆர்.எஸ். மைதானம் அருகே ஏறுதளம் அமைக்க, திட்ட வடிவமைப்புக்கு மாறாக துாண்கள் எழுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவ்விடத்தில் ஏறுதளம் அமைக்காமல், மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பகுதியில் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
உப்பிலிபாளையத்தில் இருந்து செல்வோர் மேம்பாலத்தை பயன்படுத்த முடிகிறது. அதன்பின், மேம்பாலத்தில் ஏற, பீளமேடு பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லுாரி அருகே செல்ல வேண்டும். எல்.ஐ.சி. சந்திப்பு, பாலசுந்தரம் ரோடு, ஒசூர் ரோடு வழியாக வரும் வாகனங்கள் சாலை மார்க்கமாகவே பயணிக்க வேண்டும். இதன் காரணமாக சாலையில் வாகன போக்குவரத்து குறைந்தபாடில்லை.
எனவே, 'சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவுப்படி, திட்ட வடிவமைப்பின் படி, ஏறுதளம் கட்ட வேண்டும் அல்லது மேல்முறையீடு வழக்கை விரைந்து முடிக்க, அரசு தரப்பில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ. துாரத்துக்கு மேம்பாலத்தை நீட்டிக்கும் திட்டம் அறிவித்து ஓராண்டாகி விட்டது. விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
