/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இருதய ஆரோக்கியத்துக்கு சரியான உறக்கமே சிறந்தது'
/
'இருதய ஆரோக்கியத்துக்கு சரியான உறக்கமே சிறந்தது'
ADDED : செப் 25, 2025 12:33 AM

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இருதயவியல் துறை சார்பில், 'கார்டியோ மெட்டபாலிக் நோய்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு, மருத்துவமனையில் நேற்று நடந்தது.
டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்து பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளாக, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இளைஞர்கள், பெண்கள் அனைத்து பிரிவினருக்கும், 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' எனும் வளர்சிதை மாற்ற குறைபாடு காரணமாக, எவ்வித அறிகுறியும் இன்றி ஆபத்தாக மாறி வருகிறது.
அதிக எடை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தவறான உணவு பழக்க வழக்கங்கள், உடல் இயக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை மெட்டபாலிக் நோய்கள் ஏற்பட அடிப்படை காரணமாக அமைந்துள்ளன. தினமும் 30 நிமிடங்கள் நடை அல்லது உடற்பயிற்சி, காய்கறி மற்றும் பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். புகை மற்றும் ஆல்கஹால் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சரியான உறக்கம், மன அழுத்த மேலாண்மை இருதய ஆரோக்கியத்துக்கு அவசியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்வில், இதய நோயை முன்கூட்டியே கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது, மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்னைகளால் ஏற்படும் சிறுநீரக பிரச்னை, சர்க்கரை நோய் தடுப்பு மருந்துகளின் தற்போதைய வரவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் விளக்கினர். இருதயவியல் துறை தலைவர் நம்பிராஜன், சிறுநீரகவியல் துறை தலைவர் காந்திமோகன், சர்க்கரை நோய் பிரிவு தலைவர் வெண்கோ ஜெயபிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.