/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
116.29 கி.மீ. மழை நீர் வடிகால் கட்ட ரூ.274 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு
/
116.29 கி.மீ. மழை நீர் வடிகால் கட்ட ரூ.274 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு
116.29 கி.மீ. மழை நீர் வடிகால் கட்ட ரூ.274 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு
116.29 கி.மீ. மழை நீர் வடிகால் கட்ட ரூ.274 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு
ADDED : அக் 16, 2025 08:59 PM
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. வீடுகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பாதாள சாக்கடை குழாயில் செல்கிறது. பல இடங்களில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. அதனால், மழை நீர் வடிந்து சென்று நீர் நிலைகளில் கலக்கும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 100 வார்டுகளில் எந்தெந்த இடங்களில் புதிதாக வடிகால் கட்ட வேண்டுமென ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் புதிதாக உருவான நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி இன்னும் செய்து தரப்படவில்லை. அங்கு மழை நீர் தேங்குவதால் மண் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன. வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். நடந்து கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இவை தவிர, நகரப்பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள மழை நீர் வடிகால் மண் மேவி அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் செல்ல வழியின்றி, ரோட்டில் ஓடுகின்றன.
எந்தெந்த இடங்களில் மழைநீர் வடிகால் கட்ட வேண்டுமென, பொறியியல் பிரிவு மூலமாக, 100 வார்டுக்கும் சேர்த்து, 2,200 கோடி ரூபாய் தேவைப்படுமென, விரிவான திட்ட அறிக்கையை மாநகராட்சி தயாரித்துள்ளது. இதில், அவசிய அவசரம் கருதி முக்கியமாக வேண்டிய இடங்களை அடையாளம் கண்டு, முதல்கட்டமாக, 274கோடி ரூபாய் கேட்டு, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''மாநகராட்சி பகுதி முழுவதும் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். அதில், 49 ரோடுகளில், 116.29 கி.மீ., துாரத்துக்கு, 274 கோடியில் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு நிதி ஒதுக்கக்கோரி, தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளோம்,'' என்றார்.