/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் மறியல்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் மறியல்
ADDED : பிப் 27, 2024 11:40 PM

ஆனைமலை:ஆனைமலை அருகே, குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்டது காளியாபுரம் பிரிவு எம்.ஜி.ஆர்., காலனி. இங்கு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் முறையாக வினியோகம் இல்லாததால், அப்பகுதி மக்கள், சேத்துமடை ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் சிரமமாக உள்ளது.
குடிநீர் வராதது குறித்து, வாட்டர் மேனிடம் கேட்டால், முறையாக பதில் கூறுவதில்லை. குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
இதையடுத்து, ஆனைமலை போலீசார் பேச்சு நடத்தி, குடிநீர் முறையாக வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தனர். சமரச பேச்சால், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

