/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல் மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
சுற்றுச்சூழல் மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 14, 2025 01:23 AM

வால்பாறை ;சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதாவை உடனடியாக ரத்து செய்ய கோரி, ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வனம், வனஉயிரினம், நீர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு, சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதா வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மசோதா அமல்படுத்தினால் வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மசோதாவை ரத்து செய்யக்கோரி வால்பாறையில் ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் கல்யாணி தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், 'தேயிலை தொழிலாளர்களை பாதுகாக்கவும், வால்பாறை மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ள இந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வால்பாறையில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்,' என்றனர்.
ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜூனராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., கிருஷ்ணன், மற்றும் தி.மு.க., காங்., கம்யூ., வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.