/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
/
வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
ADDED : மே 02, 2025 09:10 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே கரிமேடு பகுதியில் சாக்கடை வடிகால் வசதியை மேம்படுத்தி தரக்கோரி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட கரிமேடு பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிக்கும்மக்களுக்கு சாக்கடை வடிகால் வசதி போதிய அளவில் ஏற்படுத்தி தராததால், மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் சாக்கடை வடிகால் வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பின் பொதுமக்கள் சமாதானம்அடைந்து கருப்பு கொடிகளை அகற்றினர்.