/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போராட்டம் நடத்தியும் மாறுகிற மாதிரி தெரியலை; அடுத்தகட்டத்துக்கு தயாராகும் தி.மு.க., கூட்டணி கட்சிகள்
/
போராட்டம் நடத்தியும் மாறுகிற மாதிரி தெரியலை; அடுத்தகட்டத்துக்கு தயாராகும் தி.மு.க., கூட்டணி கட்சிகள்
போராட்டம் நடத்தியும் மாறுகிற மாதிரி தெரியலை; அடுத்தகட்டத்துக்கு தயாராகும் தி.மு.க., கூட்டணி கட்சிகள்
போராட்டம் நடத்தியும் மாறுகிற மாதிரி தெரியலை; அடுத்தகட்டத்துக்கு தயாராகும் தி.மு.க., கூட்டணி கட்சிகள்
ADDED : பிப் 11, 2025 11:59 PM
கோவை; கோவை மாநகராட்சியில், சொத்து வரிக்கு, ஒரு சதவீதம் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அடுத்தகட்ட போராட்டத்துக்கு, தி.மு.க., கூட்டணி கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
கோவை மாநகராட்சியில், சொத்து வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாமல் இருந்தால், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சொத்து வரி ஆறு சதவீதம் உயர்த்தப்படுகிறது.
வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அப்படியும் செலுத்தாமல் இருந்தால், மாநகராட்சியில் இருந்து போனில் நினைவூட்டல் வழங்குகின்றனர்.
வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் வாயிலாக, வரி வசூல் தீவிரப்படுத்தப்படுகிறது. லட்சக்கணக்கில் நிலுவை வைத்திருப்போரை, பில் கலெக்டர்கள் சந்தித்து வசூலித்து வருகின்றனர். இப்படி, பல வகைகளிலும் நெருக்கடி தரப்படுகிறது.
கண்டித்து வெளிநடப்பு
இதை கண்டித்து, காங்.,- மா.கம்யூ., - இ.கம்யூ., - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், மாநகராட்சி கூட்டத்தில், மேயரை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பியதோடு, வெளிநடப்பு செய்தனர்.
இருந்தும், மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் மாற்றம் வரவில்லை. 'ட்ரோன் சர்வே' மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. குடிநீர் இணைப்பை துண்டிக்கக் கூடாது; பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டுமென, பில் கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், அனைத்து பில் கலெக்டர்களுக்கும் 'வாக்கி டாக்கி' வழங்கி, வரி வசூல் முன்னேற்றம் தினமும் அலசப்படுகிறது. இம்மாத இறுதிக்குள், 80 சதவீதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சேர்ந்து, போராட்டம் நடத்திய பிறகும் நடவடிக்கை எடுக்காததால், அடுத்தகட்ட போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மா.கம்யூ.,நிர்வாகிகள் கூறியதாவது:
மா.கம்யூ., அகில இந்திய மாநாட்டையொட்டி, கோவையில், 21ல் மாநில செயலாளர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்பின், தொழில்துறையினர், வர்த்தக அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் என அனைத்து தரப்பினரையும் அழைத்து, கலந்தாய்வு கூட்டம் நடத்தவுள்ளோம்.
மக்கள் படும் கஷ்டத்தை, தி.மு.க.,வினர் உணராமல் இருக்கின்றனர். இ.கம்யூ.,விடம் பேசி விட்டோம். காங்., ம.தி.மு.க.,வுடனும் பேசுவோம். 21ம் தேதிக்கு பின்பாவது, மக்களின் கஷ்டத்தை தி.மு.க., உணரும் என நம்புகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

