/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயத்துக்கான மின் இணைப்பு வழங்குங்க! குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
/
விவசாயத்துக்கான மின் இணைப்பு வழங்குங்க! குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
விவசாயத்துக்கான மின் இணைப்பு வழங்குங்க! குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
விவசாயத்துக்கான மின் இணைப்பு வழங்குங்க! குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : டிச 11, 2025 05:10 AM

பொள்ளாச்சி: 'விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தும் இதுவரை இணைப்பு வழங்கவில்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விவசாயிகள், பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், ஆனைமலை, தாளக்கரை, ராசக்காபாளையம், டி. நல்லிக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
மின்வாரிய அதிகாரிகளுடன், விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தும் இணைப்பும் வழங்கப்படாமல் உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
விவசாயிகள் கூறியதாவது:
விவசாய மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த, 2015ம் ஆண்டு பதிவு செய்து இருந்தோம். கடந்தாண்டு, பணம் கட்ட சொல்லி மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி, சுயநிதி திட்ட வரிசையில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டுத்தொகை செலுத்தினோம். ஆனால், 20 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை.
ஒரு சிலர் மின் இணைப்பு கிடைக்க தாமதமாகியதால், 3ஏ1 மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்ய முன்வந்தனர். ஆனால் அவ்வாறு பெற்றால், 50 ஆயிரம் ரூபாய் செலுத்திய சுயநிதி திட்டத்தில் இருந்து சாதாரண நிலைக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், மின் இணைப்பு பெற தயக்கம் காட்டினர். தற்போது, கோடை காலம் நெருங்குவதால், தண்ணீர் பாய்ச்ச மின் இணைப்பு அவசியமாக தேவைப்படும். பயிர்களை காப்பாற்ற மின் இணைப்பு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அதற்கு அதிகாரிகள், 'சீனியாரிட்டி வரிசையில் உங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

