/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலாம் மண்டலத்துக்கு இரண்டரை சுற்று நீர் வழங்குங்க! திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு வலியுறுத்தல்
/
முதலாம் மண்டலத்துக்கு இரண்டரை சுற்று நீர் வழங்குங்க! திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு வலியுறுத்தல்
முதலாம் மண்டலத்துக்கு இரண்டரை சுற்று நீர் வழங்குங்க! திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு வலியுறுத்தல்
முதலாம் மண்டலத்துக்கு இரண்டரை சுற்று நீர் வழங்குங்க! திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2024 12:05 AM

பொள்ளாச்சி;'திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு, இரண்டரை சுற்று நீர் வழங்க வேண்டும்,' என திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு, அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து, கடந்தாண்டு செப்., 1ம் தேதி முதல், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, தொகுப்பு அணைகளில் இருந்து, பெறப்பட்டு, திருமூர்த்தி அணையில் இருப்பு செய்யப்பட்டது.
கடந்தாண்டு, செப்., 20ல் நான்காம் மண்டல பாசனத்துக்கு, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த மண்டலத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.
முதல் சுற்று பாசனத்தின் போது, பிரதான கால்வாய் இரு முறை உடைந்து, பாசன நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாம் சுற்றுக்கு, மூன்று மாத இடைவெளிக்குப்பிறகு, கடந்தாண்டு டிச., 16ல், தண்ணீர் திறக்கப்பட்டு வழங்கப்பட்டது.
நான்காம் மண்டலம் நிறைவடைந்த நிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.
பொள்ளாச்சி, உடுமலை செயற்பொறியாளர்கள், அதிகாரிகள், திட்டக்குழு உறுப்பினர்கள், பாசன சங்கத்தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொகுப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பு கணக்கீட்டு, இரண்டரை சுற்றுக்கு நீர் வழங்க வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:
நான்காம் மண்டலத்துக்கு இரண்டு சுற்று நீர் தான் வழங்கப்பட்டது. மழை பெய்ததால் நிலை பயிர்கள் காப்பாற்றப்பட்டன.
தற்போது, மழையும் இல்லாத சூழலில், கடுமையான வறட்சி நிலவுவதால் இரண்டரை சுற்று நீர் வழங்க, திட்டக்குழு சார்பில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்கு உயர் அலுவலர்களுடன் கலந்து பேசி, உரிய முடிவு எடுப்பதாக கண்காணிப்பு பொறியாளர் உறுதியளித்தார்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.