/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும், குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி
/
குண்டும், குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி
ADDED : பிப் 17, 2025 10:46 PM

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கிபாளையம் ரோடு சிதலமடைந்து மேடு, பள்ளமாக இருப்பதால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதுப்பாளையம் செல்லும் ரோட்டில், மயானம் பகுதியில் இருந்து ராக்கிபாளையம் செல்லும் பாதையை தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் நடந்தும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்றும் வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் வாகனங்களின் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருவதால், நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலர் ராக்கி பாளையம், என்.ஜி.ஜி.ஒ., காலனி, வெள்ளக்கிணறு, கணபதி வழியாக கோவை செல்ல இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.
இது தவிர, நரசிம்மநாயக்கன்பாளையம், கதிர் நாயக்கன்பாளையம் பிரிவு, தொப்பம்பட்டி பிரிவு, ஜங்கம நாயக்கன் பாளையம், நேரு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'இந்த சாலை ஏற்கனவே மேடும், பள்ளமாக உள்ளது. பகல் நேரத்திலேயே இச்சாலையில் செல்வது சிரமமாக உள்ளது. இரவு நேரத்தில் இப்பகுதியில் தெரு விளக்குகள் எதுவும் இல்லாததாலும், இச்சாலையை கடந்து செல்வதில் பெரும் சிரமம் உள்ளது.
இச்சாலையில் உடனடியாக தெருவிளக்கு அமைத்து, சாலையை செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

