/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம சபை கூட்டம் பொதுமக்கள் குழப்பம்
/
கிராம சபை கூட்டம் பொதுமக்கள் குழப்பம்
ADDED : மே 01, 2025 04:42 AM
பெ.நா.பாளையம் : தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிராமசபை கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், வரவு செலவு கணக்குகள், கிராம ஊராட்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
ஒவ்வொரு கிராம சபையின் போதும், அது குறித்தான அறிவிப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துண்டு பிரசுரங்கள் வாயிலாக அறிவிப்பு செய்யப்படும். மேலும், அதில் ஊராட்சிக்குட்பட்ட எந்த பகுதியில் எத்தனை மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது என்பது குறித்தான தகவல் இடம் பெற்றிருக்கும்.
ஆனால், இந்த முறை கிராமசபை கூட்டம் குறித்தான அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தந்த ஊராட்சிக்கு உரிய தகவலாக வந்தது. இதனால் கிராம சபை கூட்டத்தை, எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்தான முடிவை ஊராட்சி நிர்வாகத்தால் உடனடியாக ஏற்பாடு செய்து அறிவிக்க இயலவில்லை. சில ஊராட்சிகளில் அவசர, அவசரமாக இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வாயிலாக ஒலிபரப்பு செய்தனர். நேற்று காலை வரை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் எங்கு நடக்கிறது என்பது குறித்தான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.