/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தார் சாலை போட பொதுமக்கள் வலியுறுத்தல்
/
தார் சாலை போட பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2025 11:39 PM

மேட்டுப்பாளையம்; சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் ஓட்ட முடியாத நிலையில் உள்ள, பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் சாலைக்கு, தார் சாலை அமைக்க, காரமடை நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், தீயணைப்பு நிலையம் அருகே, டேங்க் மேடு பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு இருந்து வடக்கு பக்கமாக, செல்லும் சாலை வழியாக, அரவிந்த் நகர், சிவாஜி நகர், எம்.ஆர்., நகர், இந்திரா நகர், ஐயப்பன் நகர், சிராஜ் நகர் உள்பட, 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு, பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இச்சாலையில் பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் ஓட்ட முடியாத அளவிற்கு குழிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இந்த சாலைக்கு தார் போடக் கோரி, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், பலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். இரவில் பெண்களுக்கு, பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.
சாலையின் ஒரு புறம் காரமடை நகராட்சிக்கு உட்பட்டதாகும். மற்றொருபுறம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். எல்லை பிரச்னை காரணமாக, இந்த சாலைக்கு தார் போடாமல், நீண்ட காலமாக அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.