/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துடியலூர் வாரச்சந்தையில் திருட்டு அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
/
துடியலூர் வாரச்சந்தையில் திருட்டு அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
துடியலூர் வாரச்சந்தையில் திருட்டு அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
துடியலூர் வாரச்சந்தையில் திருட்டு அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
ADDED : பிப் 18, 2025 10:15 PM
பெ.நா.பாளையம்; துடியலூர் வார சந்தையில் மொபைல் போன், தங்கச் செயின், இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை வடக்கு பகுதியில் துடியலூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடக்கிறது. சந்தையின் ஒரு பகுதியில் மாட்டுச்சந்தையும் நடக்கிறது.
பாரம்பரியமான இச்சந்தைகளில் மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியமான பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நவீன டிஜிட்டல் உலகத்திலும், வாரம் தோறும் நடக்கும் இச்சந்தையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் திரளாக வரும். குறிப்பாக, துடியலூரை சுற்றியுள்ள என்.ஜி.ஜி.ஓ., காலனி, கதிர் நாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை, பழனி கவுண்டன் புதூர், வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருவது வாடிக்கை.
சந்தைக்கு வரும் பொதுமக்கள், தங்களுடைய இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த இடம் இல்லை. மேலும், சந்தையில், குறிப்பாக, மாலை வேலைகளில் தங்கச் செயின் திருடர்கள், மொபைல் போன் திருடர்கள் ஏராளமாக உலா வருகின்றனர். சந்தைக்கு வரும் நபர்களிடமிருந்து வாரந்தோறும் குறைந்தபட்சம் ஐந்து நபர்களிடம் மொபைல் போன் திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு, தங்க செயின் திருட்டு, பைகளில் வைக்கப்பட்டுள்ள மணி பர்ஸ் உள்ளிட்டவையும் திருட்டு போகிறது.
இது குறித்து, சந்தைக்கு வரும் பொதுமக்கள் கூறுகையில்,' கட்டட தொழிலாளர்கள் உள்ளிட்ட விவசாய கூலி தொழிலாளர்களுக்கு, வாரந்தோறும் சனிக்கிழமை கூலி வழங்கப்படுகிறது. இதை எடுத்துக் கொண்டு திங்கட்கிழமை மாலை துடியலூர் சந்தைக்கு வரும் கூலி தொழிலாளர்கள், திருடர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது பெரும் சிரமமாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஒரே நபரிடம் இருந்து அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு மொபைல் போன்கள் திருட்டுப் போயின. துடியலூர் வார சந்தையை குறி வைக்கும் திருடர்களிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற துடியலூர் போலீசார் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் வார சந்தைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்கும் நிலை ஏற்படலாம்.
இதனால், பாரம்பரிய துடியலூர் சந்தை மூடுவிழா காணும் அபாயம் உள்ளது' என்றனர்.