/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாமில் பொதுமக்கள் விரக்தி; வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாமில் பொதுமக்கள் விரக்தி; வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாமில் பொதுமக்கள் விரக்தி; வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாமில் பொதுமக்கள் விரக்தி; வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு
ADDED : ஜூன் 25, 2025 10:21 PM
கருமத்தம்பட்டி; சூலுார் தாலுகாவில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் உட்பட பல அதிகாரிகள் ஆய்வுக்கு வந்திருந்தும், வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்ததால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சூலுார் தாலுகாவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில், உங்களை தேடி , உங்கள் ஊரில் திட்ட ஆய்வு பணிக்காக மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள், தணிக்கை மேற்கொண்டனர். கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில், கலெக்டர் பவன்குமார், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம்,ரேஷன் கடை, கூட்டுறவு கடன் சங்கம், நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்தார்.
கணியூரில், கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் மனுக்களை பெற்றார்.
முன்னதாக, கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தணிக்கை அதிகாரிகள் மத்தியில் பேசிய கலெக்டர், தணிக்கை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வருவாய் கிராமத்துக்கு சென்று ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனு பெற வேண்டும். அனைத்தையும் தொகுத்து, அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.
கலெக்டரை எதிர்பார்த்து
சூலுார் பேரூராட்சி பகுதியில், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் மனுக்களை பெறுவார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், நேற்று காலை, சூலுார் தாலுகா அலுவலகத்துக்கு பொதுமக்கள் பலர் மனுக்களுடன் வந்தனர். ஆனால், கலெக்டர் கருமத்தம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஆய்வு செய்ய வேண்டிய முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார் சூலுாரில் ஆய்வு மேற்கொண்டார். இதனால், கலெக்டரிடம் மனு கொடுக்க முடியாமல் மக்கள் விரக்தி அடைந்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில்,'கலெக்டரை பார்த்து மனு கொடுக்கலாம் என, பல கி.மீ., தொலைவில் இருந்து வந்தோம். இங்கு வந்ததும் கருமத்தம்பட்டிக்கு செல்லுங்கள் என்கின்றனர்,' என்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்ததால், தாலுகா அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், சர்வேயர்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வரவில்லை. இதனால், கள ஆய்வுக்கு சென்ற தணிக்கை அதிகாரிகள், வருவாய்த்துறை தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களை அறிய முடியாமல் தவித்தனர்.