/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானம் அருகே கபர்ஸ்தான் பொதுமக்கள் அமைக்க எதிர்ப்பு
/
மயானம் அருகே கபர்ஸ்தான் பொதுமக்கள் அமைக்க எதிர்ப்பு
மயானம் அருகே கபர்ஸ்தான் பொதுமக்கள் அமைக்க எதிர்ப்பு
மயானம் அருகே கபர்ஸ்தான் பொதுமக்கள் அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 01, 2025 05:28 AM
போத்தனூர் : கோவை, கோவைபுதூர் செல்லும் வழியில் குளத்துப்பாளையம் பகுதியில் ஹிந்துக்கள் மயானம் உள்ளது. இதனையொட்டி சுமார், 30 ஆண்டுகளுக்கு முன் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டன. அப்போது ஒருவர் 75 சென்ட் இடத்தை வாங்கினார்.
அதனை, கோவைபுதூரிலுள்ள சுன்னத் ஜமா அத் பள்ளிவாசலுக்கு தானமாக கொடுத்துள்ளார். அவ்விடத்தில், கபர்ஸ்தான் (மயானம்) அமைக்க மசூதி சார்பில், கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டது.
அருகே மயானம் இருப்பதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டது.
நேற்று குனியமுத்தூர் கிராம வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் இடத்தை அளக்க வந்தனர்.
இதனையறிந்த அப்பகுதி ஊர்கவுண்டர், ஊர் தலைவர் மற்றும் தி.மு.க., காங்., அ.தி.மு.க., பா.ஜ., கட்சிகளை சேர்ந்தோரும் அங்கு கூடினர். கபர்ஸ்தான் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
குனியமுத்தூர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் மேற்பார்வையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் தங்கள் கருத்தை கூறினர். இதையடுத்து அளவீடு பணி மேற்கொள்ளப்படவில்லை. அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியினர் கூறுகையில், 'இங்குள்ள மயானம் பல சமூகத்தினருக்கு பாத்தியப்பட்டது. அருகே கபர்ஸ்தான் அமைக்க திட்டமிட்டுள்ள இடம், வீட்டு மனைகள். இங்கு வீடு கட்டிக்கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. கபர்ஸ்தான், மசூதி கட்ட அனுமதிக்கக் கூடாது' என்றனர்.
சுன்னத் ஜமா -அத் மசூதி தலைவர் தாஜுதீன் சுல்தானிடம், கருத்து கேட்க மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, அழைப்பை ஏற்கவில்லை.