ADDED : டிச 15, 2024 11:04 PM
வால்பாறை; குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள ஆபத்தான மரங்களை வெட்ட வேண்டும் என வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது கக்கன்காலனி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகைக்கு பின்புறம், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன.
வீட்டின் பின்புறம், 30க்கும் மேற்பட்ட யூக்காலிப்டஸ் மரங்கள் உள்ளன. தற்போது காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், எந்த நேரத்திலும் மரம் வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால், கக்கன்காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
கக்கன்காலனி மக்கள் கூறுகையில், 'பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு பின் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக வெட்ட, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். பலத்த காற்றுடன் மழை பெய்யும் நிலையில், மரம் எப்போது வேண்டுமானாலும் வீட்டின் மீது விழும் நிலை உள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக வெட்ட உத்தரவிட வேண்டும்,' என்றனர்.
