ADDED : ஜூன் 25, 2025 09:20 PM

-அருணகிரி, தாமரைக்குளம்: கிணத்துக்கடவு ஒன்றியத்தில், பல கிராமங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக உள்ளன. சில பகுதிகளில் மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில் இருக்கிறது. அவற்றை மாற்றம் செய்ய, ஆங்காங்கே புதிய மின் கம்பங்கள் இருப்பு வைத்தாலும், மாற்றியமைக்க பல மாதங்களாகிறது. இதனால், ஒரு சில பகுதிகளில் சேதமடைந்த மின்கம்பங்களில் மின் பழுதை சரி செய்யக்கூட, லைன்மேன்கள் ஏற முடியாத நிலை உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
ஆரோக்கியசாமி, வால்பாறை: வால்பாறையில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. சில இடங்களில் மின் கம்பத்தின் மேலிருந்து கீழ் வரை சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளன. மக்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள, சேதமடைந்த மின் கம்பங்களால் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் பெரும்பாலான தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை.
கே.அருண்பிரசாத், பொள்ளாச்சி: இரும்பு கம்பிகள் துருப்பிடித்து கீழே சாயும் நிலையிலான மின்கம்பங்கள், அவ்வப்போது கண்டறியப்பட்டு, மாற்றப்பட வேண்டும். அதிகப்படியான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அதன் நிலையை துறை ரீதியான அதிகாரிகள் கண்டறிவது கடினம். மின்கம்பங்கள், மின் கம்பிகள் உள்ளிட்ட மின் பாதையில் ஏற்படும் பாதிப்புகளை மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில், 'வாட்ஸ்ஆப்' எண் வெளியிட வேண்டும். அதனை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி மின்கம்பங்களில் ஆங்காங்கே காட்சிப்படுத்த வேண்டும்.
சிவலிங்கம், விவசாயி: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், புறநகர பகுதிகள் மற்றும் விவசாய மின் இணைப்புகள் வழங்க அமைக்கப்பட்ட, 20 ஆண்டுக்கு முந்தைய மின் கம்பங்கள் சேதமடைந்து, எந்நேரமும் விழும் அபாய நிலையில் உள்ளது. அதே போல், தாழ்வாக அமைந்துள்ள மின் கம்பிகளாலும், சீரான மின் வினியோக குளறுபடி காரணமாகவும் மக்கள் பாதிக்கின்றனர். மின் வினியோக கட்டமைப்புகள் மற்றும் மின் வினியோகத்திலுள்ள குளறுபடிகளை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகள் முன் வர வேண்டும்.