/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழைகளின் வாழ்க்கையை 'சுவையாக்கும்' பூசணி அல்வா!
/
ஏழைகளின் வாழ்க்கையை 'சுவையாக்கும்' பூசணி அல்வா!
ADDED : மார் 29, 2025 11:33 PM

ரம்ஜான் பண்டிகை தினத்தில், நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு ஜாதி, மதம் பேதமின்றி, இனிப்புகள் வழங்கி, இஸ்லாமியர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
பண்டிகையை முன்னிட்டு, கோவை கோட்டைமேட்டில், சுயமுன்னேற்ற சங்கத்தை சேர்ந்த திருநங்கைகளால் தயாரிக்கப்படும் பூசணி அல்வா, தமிழகம் மட்டுமின்றி, துபாய், கத்தார், சவுதி, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும், அனுப்பிவைக்கப்படும் அளவுக்கு பிரபலம்.
இந்த பூசணி மிட்டாய் அல்வா விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை, ஏழை குழந்தைகளின் கல்வி, ஏழை பெண்களுக்கு திருமண உதவி, மருத்துவ உதவி போன்ற பொது சேவைகளுக்கு, கோவை முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தினர், பயன்படுத்தி வருகின்றனர்.
அல்வா தயாரிக்கும் திருநங்கைகளான லட்சுமி, பிரேமா உள்ளிட்டோர் கூறியதாவது:
ரம்ஜான் பண்டிகை சமயத்தில் தயாரிக்கப்படும், இந்த அல்வா இனிப்பை கிறிஸ்தவர், ஹிந்துக்கள் உள்ளிட்டோருக்கு இஸ்லாமியர் பரிசாக வழங்குகின்றனர். இந்த அல்வா விற்பனையில் கிடைக்கும் பணம், பல்வேறு நற்காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பாகவே, வெண் பூசணிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, மூன்று நாட்களுக்கு வேகவைத்து, தண்ணீரை வடிகட்டிய பின்பு பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, நெய், அத்திப்பழம், இனிப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேர்த்து தயாரிக்கிறோம்.
ஐந்து டன் எடை கொண்ட பூசணிக்காயில் இருந்து, இரண்டு டன் அல்வா தயாரிக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.