/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல் குவாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'
/
கல் குவாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'
ADDED : ஏப் 16, 2025 09:58 PM

மேட்டுப்பாளையம்; கல்குவாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால், மேட்டுப்பாளையம் தாலுக்காவில் 1,200 டிப்பர் லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கட்டுமான பணிக்கு தேவையான, கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் வழங்கும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், தமிழக அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நேற்று இயங்கவில்லை. இதனால், இதனை நம்பி உள்ள டிப்பர் லாரிகள் லோடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து,காரமடை டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம், காரமடையில் உள்ள கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்களை நம்பி 40க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் டிரேடர்ஸ்களில், சுமார் 1,200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் உள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் எம். சாண்ட், பி. சாண்ட், ஜல்லி போன்ற லோடுகள் கிடைக்கவில்லை.
இதனால் கட்டுமான பணிகளுக்கு பொருட்களை அனுப்ப முடியவில்லை. டிப்பர் லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மேட்டுப்பாளையம், காரமடையில் சுமார் 2,000 குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது கரூர், காங்கேயம், மேட்டுப்பாளையம், காரமடை என எல்லா பகுதிகளிலும் ஒரு எம்.சாண்ட் யூனிட் ரூ.5,500க்கு விற்பனை ஆகிறது. தமிழக அரசின் பல்வேறு கெடுபிடிகளால் நான்கு ஆண்டுகளில் 40 சதவீதம் விலை ஏற்றம் ஆகியுள்ளது. தமிழக அரசின் புதிய வரி விதிப்பால், அதாவது குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களின் டன் கணக்கு அடிப்படையில், நிலவரி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பால் மேலும் எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி கற்கள் விலை உயரும். ஒரு யூனிட் எம். சாண்ட் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விலை உயரும் அபாயம் உள்ளது.
டிப்பர் லாரிகள் இயங்காததால் காரமடை, மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளவுக்கு கொண்டு செல்லப்படும் கட்டுமான பொருட்கள் தடைபட்டுள்ளது. இது கட்டுமான துறையில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். தமிழக அரசு உடனடியாக தலையீட்டு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.