/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே அங்கீகார தேர்தல்; தொழிற்சங்கங்கள் முனைப்பு!
/
ரயில்வே அங்கீகார தேர்தல்; தொழிற்சங்கங்கள் முனைப்பு!
ரயில்வே அங்கீகார தேர்தல்; தொழிற்சங்கங்கள் முனைப்பு!
ரயில்வே அங்கீகார தேர்தல்; தொழிற்சங்கங்கள் முனைப்பு!
ADDED : நவ 15, 2024 10:03 PM

கோவை; இந்திய ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரம் பெறுவதற்கான தேர்தல், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தொழிலாளர்களின் ஆதரவை திரட்ட ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்திய ரயில்வேயில், அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். முதல் முறையாக 2007ல் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்தது. அதன்பின், 2013ம் ஆண்டில் தொழிற்சங்க தேர்தல் நடந்தது.
கொரோனா தொற்று பரவலால், 2019க்கு பின், இத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. பல்வேறு முயற்சிகளுக்கு பின், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தொழிற்சங்கங்கள் ஆதரவு திரட்ட ஆரம்பித்து விட்டன. வரும் டிச., 4 முதல், 6 வரை ரகசிய ஒட்டுப்பதிவு நடத்தப்பட்டு, டிச., 12ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ், எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம், டி.ஆர்.கே.எஸ்., எனப்படும் தக்சின் ரயில்வே கார்மிக் சங்கம், ஆர்.எம்.யு., எனப்படும் ரயில் மஸ்துார் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் போட்டி போடுகின்றன. தொழிற்சங்கத்தினர், ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களின் ஆதரவை பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:
எஸ்.ஆர்.எம்.யு., சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன்: தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்; 80-90 சதவீத ஓட்டுக்களை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளை தவிர இன்ஜினியரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிக்னல், கமர்சியல், அக்கவுன்ட்ஸ், ரயில் மேனேஜர் மற்றும் டிரைவர்கள் உட்பட மற்ற அனைத்து பிரிவு தொழிலாளர்களும் இத்தேர்தலில் ஓட்டளிப்பர். சேலம் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆதரவு திரட்டி வருகிறோம்.
எஸ்.ஆர்.இ.எஸ்., கோட்ட துணை தலைவர் ஜெபசிங் பிரசாந்த்: 'யுனைடெட் பென்சன் ஸ்கீம்' கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். எட்டாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
சி.ஆர்.சி.,யை உடனடியாக அமல்படுத்த வேண்டும். உச்சவரம்பு இல்லாமல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறோம்.
டி.ஆர்.இ.யு., கிளை செயலாளர் சோழர் ராஜ்: புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போனஸ் உச்சவரம்பை அதிகப்படுத்த வேண்டும். ரயில்வேயை தனியார் வசமாக்குவதை கைவிட வேண்டும்.
ஒரு கோட்டத்தில் இருந்து மற்றொரு கோட்டத்துக்கு ஊழியர்களை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறோம். போத்தனுார் எஸ் அண்டு டி பணிமனையில், செயல் தலைவர் ஜானகிராமன் தலைமையில் ஓட்டு சேகரிப்பு நடத்தப்பட்டது.
டி.ஆர்.கே.எஸ்., கிளை செயலாளர் செல்வ ஸ்ரீகாந்த்: தொழிலாளர்களுக்கான 15 நாள் விடுப்பு, 8 நாளாக குறைக்கப்பட்டு இருந்தது; விடுமுறை நாட்களை மீட்டெடுப்போம்.
ஒரு மணி நேரம் உணவு இடைவேளையுடன் காலை யில் 'இன்', மாலையில் 'அவுட்' என்கிற வருகைப்பதிவு அமல்படுத்த முயற்சிப்போம். அடிப்படை பயிற்சி பெறுவோருக்கு உணவு வசதியுடன் தங்கும் விடுதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்போம் என்கிற உறுதிமொழி கொடுத்து ஆதரவு திரட்டுகிறோம்.
இவ்வாறு, தொழிற்சங்கத்தினர் கூறினர்.