UPDATED : அக் 16, 2026 01:41 AM
ADDED : அக் 16, 2026 01:37 AM

கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை நேற்றே அமர்க்களமாக துவங்கியது. இரவு முழுவதும் பரலாக மழை பெய்தது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு, வானிலை மையம் நேற்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. எதிர்பார்த்தது போலவே வடகிழக்கு பருவமழை முதல் நாளில் கொட்டித் தீர்த்து, கோவையை குளிர்வித்தது.
கோவை நகர், புறநகர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்யத் துவங்கியது.
கோவை காந்திபுரம், உக்கடம், ரயில்வே ஸ்டேஷன் பகுதி, குறிச்சி, சுந்தராபுரம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், பீளமேடு மற்றும் மத்தியப் பேருந்து நிலையச் பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.
முக்கிய சாலைகளில் கனமழையால் லேசாக நீர் தேங்கியது. இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சரவணம்பட்டி – துடியலுார் சாலை வாகன நெரிசலில் சிக்கித் தவித்தது.
பேரூர், குனியமுத்துார், சரவணம்பட்டி, துடியலுார், ஈச்சனாரி, சின்னதடாகம் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இன்றும் பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
