/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளத்தில் தேங்கிய மழைநீர்; சிறு பாலம் பணிகள் பாதிப்பு
/
பள்ளத்தில் தேங்கிய மழைநீர்; சிறு பாலம் பணிகள் பாதிப்பு
பள்ளத்தில் தேங்கிய மழைநீர்; சிறு பாலம் பணிகள் பாதிப்பு
பள்ளத்தில் தேங்கிய மழைநீர்; சிறு பாலம் பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 16, 2025 10:34 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மேற்குபுறவழிச்சாலை திட்ட பணியில், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் அருகே, சிறு பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழியால், மழைநீர் தேங்கி நிற்கிறது.
பொள்ளாச்சி நகரில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை, கோவை ரோடு, ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.
மொத்தம், 73 கோடியே, 35 லட்சம் நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இப்பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்ததால், கிருஷ்ணா குளம் ரோட்டில், சிறு பாலம் பணிக்காக தோண்டப்பட்ட குழியில், மழைநீர் அதிகளவு தேங்கி வழிந்தோடியது.
இந்த ரோட்டில் உள்ள தனியார் நிலத்தை சூழ்ந்து மழைநீர் குட்டை போல நிற்கிறது. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் அருகே இரண்டு சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த பாலங்களில் மழைநீர் அதிகளவு தேங்கி வழிந்தோடியதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ரோடு பணிகள் மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். தற்போது, பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.