/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓப்பியம் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது
/
ஓப்பியம் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது
ADDED : நவ 27, 2025 05:26 AM

கோவை: கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, விலை உயர்ந்த போதைப் பொருளான ஓப்பியம் சூலுார் ராவத்துார் பிரிவில் பதுக்கி வைத்துள்ள தகவல் கிடைத்தது. அங்குள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த சுனில் பிஸ்னாய் என்பவர் மறைத்து வைத்திருந்த, 10 கிராம் ஓப்பியத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் பிஸ்னாய், 29, கோவை ராமநாதபுரம் கொங்கு நகரில் தங்கி, ராவத்துார் பிரிவில் உள்ள அவரது சகோதரர் கைலாஷ்க்கு சொந்தமான கண்ணாடி, பிளைவுட் கடையில் பணிபுரிந்து வந்தது தெரிந்தது.
இவரது நண்பரான ராஜஸ்தானை சேர்ந்த உமேஷ், கோவையில் தங்கியுள்ள ராஜஸ்தானை சேர்ந்தவர்களுக்கு, ஓப்பியத்தை விற்று வந்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ராஜஸ்தான் செல்லும் போது சுனில் பிஸ்னாயிடம் ஓப்பியத்தை கொடுத்து, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ளவர்களுக்கு விற்க செய்துள்ளார். குறிப்பிட்ட தொகையை, சுனில் பிஸ்னாய்க்கு வழங்கி வந்தது தெரிந்தது .
சுனில் பிஸ்னாயை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஓப்பியம் சர்வதேச சந்தையில், கிலோவுக்கு ரூ.60 ஆயிரம் முதல், ரூ.1.20 லட்சம் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

