/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார விலை நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேரணி
/
ஆதார விலை நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேரணி
ஆதார விலை நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேரணி
ஆதார விலை நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேரணி
ADDED : ஜன 28, 2025 07:51 AM

பொள்ளாச்சி : வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டுமென, டிராக்டர் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகரில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. மாநில தலைவர் பாபு சண்முகம் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பல்லடம் ரோடு, ராஜேஸ்வரி மண்டபம் அருகே துவங்கிய பேரணி, நியூஸ்கீம் ரோடு, காந்தி சிலை மார்க்கமாக, மகாலிங்கபுரம் கோவை சந்திப்பு ரோட்டைச் சென்றடைந்தது.
அப்போது, மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள், விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட, மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதேபோல, பனை, தென்னை விவசாயிகளுக்கு, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். நில எடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளின் அனுமதியின்றி நிலங்களை எடுக்கக் கூடாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் எழுப்புவதை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து எழுப்பப்பட்டுள்ள தனியார் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும், என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

