ADDED : ஜன 19, 2024 11:23 PM

சூலுார்;அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, வரும், 22ம்தேதி, 20 கோவில்களில் ராம நாம ஜபம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில்கும்பாபிஷேகம் வரும்,22ம்தேதி நடக்கிறது. இதையொட்டி, சூலுார் ஒன்றியத்தில், 60 ஆயிரம் பேருக்கு, கும்பாபிஷேக அழைப்பிதழ், ராமர் கோவில் படம், பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை பா.ஜ., ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தொண்டர்கள் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.
கருமத்தம்பட்டி பகுதியில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாவட்ட கவுன்சிலர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ்களை கொடுத்தனர்.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார், கவிதா, பா.ஜ., வழக்கறிஞர் அணி பார்வையாளர் ரவீந்திரன் ஆகியோர் சூலுார் கோர்ட் வக்கீல்கள் மற்றும் போலீசாருக்கு அட்சதையும், அழைப்பிதழ்களை வழங்கினர்.
இதுகுறித்து ஹிந்து இயக்கத்தினர் கூறியதாவது:
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, வரும், 22ம் தேதி, பதுவம்பள்ளி அம்மன் கோவில், கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவில், கருமத்தம்பட்டி பெருமாள் கோவில், சோமனூர் முருகன் கோவில்,பீடம் பள்ளி பெருமாள் கோவில் உள்ளிட்ட, 20 கோவில்களில், ராம நாம ஜபம் நடக்க உள்ளது. தொடர்ந்து சொற்பொழிவு, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. இதில், அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.