/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம்பெண் பாலியல் பலாத்காரம்; பிசியோதெரபிஸ்ட் கைது
/
இளம்பெண் பாலியல் பலாத்காரம்; பிசியோதெரபிஸ்ட் கைது
ADDED : செப் 25, 2024 12:44 AM

கோவை : மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட்டை,போலீசார், 2 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர்.
கோவை மருதமலை அடுத்த ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன், 68; பிசியோதெரபிஸ்ட். அனந்தகிருஷ்ணன் 2022ம் ஆண்டு ஐ.ஓ.பி., காலனியில் புதிதாக வீடு கட்டி வந்தார்.
அந்த கட்டடத்திற்கு, கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணிபுரிந்து வரும் திண்டுக்கல்லை சேர்ந்த, 23 வயது இளம்பெண், கட்டட வடிவமைப்பு மேற்கொண்டு வந்தார்.
அப்போது அனந்தகிருஷ்ணனிடம், அந்த பெண் நட்பாக பழகி வந்தார். 2023ம் ஆண்டு ஜன., மாதம் அனந்தகிருஷ்ணன் அந்த பெண்ணிடம், புதிய வீட்டின் வடிவமைப்பு குறித்து சில சந்தேகம் இருப்பதாக, தனது வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த காபி கொடுத்துள்ளார்.
மயங்கிய பெண்ணை, அனந்தகிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கண் விழித்து பார்த்த அந்த பெண், அங்கிருந்து தப்பிச்சென்று வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். ஆனால் புகாரை பெறாமல், போலீசார் அந்த பெண்ணை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண், தேசிய மகளிர் ஆணையத்தை நாடினார். மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தும் படியும், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டது.
வழக்கை விசாரிக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சிறப்பு புலனாய்வு அதிகாரியாக, போத்தனுார் உதவி கமிஷனர் கரிகால் பாரி சங்கரை நியமித்தார்.அவர், விரிவாக விசாரித்து அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். இதனையறிந்த அனந்தகிருஷ்ணன் தலைமறைவானார். தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, குமுளியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று, அவரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.